Published Date: April 2, 2023
CATEGORY: EVENTS & CONFERENCES
தென் தமிழகத்தில் வேலை வாய்ப்புகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்.
பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற நூற்றாண்டு விழாவில் அவர் மேலும் பேசியதாவது:
தமிழகத்தில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சிறந்த ஆட்சி நடைபெற்று வருகிறது. தென் தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் கல்வி அறிவு பெற்றோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக பெண்களும் அதிகமானோர் உயர்கல்வி பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் கல்வி, சமூக நலன் மற்றும் பெண் கல்வி என அனைத்து முன்னேற்றத்திலும் கிறிஸ்தவ மிஷனரிகள் பெரும் பங்காற்றியுள்ளனர். தென் தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்கு ஏற்ப அதிக அளவில் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் வளர்ச்சித் திட்ட பணிகள் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் அவர்.
தூய சவேரியார் கலைமனைகளின் அதிபர் ஹென்றிஜொரோம், செயலர் புஷ்பராஜ், முதல்வர் மரியதாஸ் மற்றும் பாளையங்கோட்டை எம்.எல்.ஏ., மு. அப்துல்வஹாப், மேயர் பி.எம். சரவணன், துணைமேயர் கே.ஆர். ராஜீ மற்றும் திரளான மாணவர், மாணவிகள் கலந்து கொண்டனர்.
Media: Dinamani